இன்ஸ்டாகிராமில் பழக்கம்... காதலனுடன் உறவுக்கார சிறுமியையும் அழைத்துச் சென்ற சம்பவம்
ஒரே மாதத்தில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதலை நம்பி 13 வயது சிறுமி ஓட்டம் பிடித்த சம்பவம் சினிமா பாணியில் பல திடுக்கிடும் திருப்பங்களை சந்தித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...
சென்னை கோட்டூர்புரத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ஆய்வகத்தை நடத்தி வருபவருக்கு 13 வயதில் ஒரு மகள்... ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் பயன்படுத்தி வந்த மாணவி, பாடத்தை காட்டிலும் அதிகம் பயன்படுத்தியது இன்ஸ்டாகிராம் செயலியைத்தான்... இப்படி எந்தநேரமும் இன்ஸ்டாகிராமில் இருந்த சிறுமிக்கு அறிமுகமாகியிருக்கிறார் வேளச்சேரியை சேர்ந்த பொறியியல் மாணவரான 19 வயது இளைஞர் சூர்யபிரகாஷ். கண்டதும் காதல் என்பது போல, இன்ஸ்டாகிராமில் சாட் செய்ததுமே காதலை தொடங்கியிருக்கிறார்கள் இருவரும்... இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி தன் சித்தப்பா மகளுடன் மாயமானார் 13 வயதான சிறுமி. மகளை காணாமல் தவித்து வந்த பெற்றோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி செல்போன் ஒன்றை தன் வசம் எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஆஸ்துமா தொல்லை இருப்பதால் பெற்றோருக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை என்றும், தன் தங்கையை மட்டுமே பெற்றோர் கவனிப்பதாகவும் தன்னை கருத்தில் கொள்ளவில்லை என்றும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார் அந்த சிறுமி. உடன் 7 வயதான தன் சித்தப்பா மகளையும் அழைத்துச் சென்றதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. மகள் மாயமானதால் தன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி உருக்கமான ஆடியோ ஒன்றை தன் மகளுக்கு அனுப்பியிருக்கிறார் பாசக்கார தந்தை... சிறுமி தன் செல்போனை பார்த்த போது தந்தை அனுப்பிய ஆடியோவை கேட்டு கதறி இருக்கிறார். ரயிலில் சென்று கொண்டிருந்த போது சிறுமி கதறி அழுவதை பார்த்த திருநங்கை ஒருவர் சூரிய பிரகாஷிடம் விசாரிக்கவே, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அந்த திருநங்கை உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கவே, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்த சிறுமி உட்பட 3 பேர் ரயில்வே போலீசாரால் உடனடியாக மீட்கப்பட்டனர். உடனடியாக 3 பேரையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் சூரிய பிரகாஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், சிறுமியை இன்ஸ்டாகிராமில் பார்த்து காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். பழகிய சிறுமியை வரவழைக்க தற்கொலை செய்து கொள்வதாக பிளாக் மெயில் செய்ததோடு வீட்டில் இருந்து 7 ஆயிரம் ரூபாய் பணத்தோடு வருமாறும் மிரட்டியிருக்கிறார் அவர். காதலனின் இந்த மிரட்டலால் பயந்து போன சிறுமி, ஒருகட்டத்தில் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுமி பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கைதான சூரிய பிரகாஷ் கடத்தல் வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். பருவ வயது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்...
Next Story