திரையில் இணைந்து பயணித்த ரஜினி, கமல் அரசியலிலும் கைகோர்த்து களம் காண்பார்களா?
ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கும் நிலையில், ரஜினியின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு வலுத்திருக்கிறது
தமிழ் சினிமாவின் இருபெரும் சிகரங்களாக உயர்ந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் தொடக்கத்தில் இருவருமே இணைந்து திரைப் பயணத்தைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தனித்தனி பாணியை கடைபிடித்து, தடம் பதித்தனர். மாஸ் ஹீரோ, சூப்பர் ஹீரோ என ஒரு பக்கம் ரஜினி கலக்கிக் கொண்டிருக்க, நடிப்பு, கதையம்சம், புதிய தொழில்நுட்பம் என கமலும் தன் வேகத்தை விட்டுக் கொடுத்ததில்லை. திரையில் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும், பொது வெளியில் நண்பர்களாக கரங்களை இணைத்துக் கொள்ளும் ரஜினியும், கமலும்... இப்போது தமிழக அரசியலில் ஒரே சமயத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்...
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்தும் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததோடு, கட்சி தொடங்கும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறார். இதற்கிடையே,... நண்பர்களான இவ்விருவரும் அரசியலில் ஒன்றிணைவார்களா? என்ற கேள்வி வலுத்திருக்கிறது. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக தேவைப்பட்டால், நானும் ரஜினியும் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று கமல் ஓராண்டுக்கு முன்னரே தெரிவித்தார். சூழல் ஏற்பட்டால், கமலுடன் இணையத் தயார் என ரஜினியும் இதற்கு பதிலளித்தார். இந்த நிலையில்தான், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாரான கமல்ஹாசன், அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? என்றும், ரஜினிக்கு அரசியலை விடவும் ஆரோக்கியம் முக்கியம் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் போட்டி போடுவேன், இல்லையென்றால் ஆதரவு கேட்பேன் என்றும் பேசியிருந்தார்.
தற்போது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், கோவில்பட்டி சுற்றுப் பயணத்தின் போது, ரஜினி கட்சியின் கொள்கைகளை அறிந்துகொண்டு, மக்களுக்காக ஈகோவை தவிர்த்து இணைந்து செயல்படத் தயார் என அறிவித்ததன் மூலம், இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வார்களா? என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.பொதுவெளியில் நண்பர்களாக இருந்தாலும், கொள்கை அடிப்படையில் ரஜினியும், கமலும் இருவேறு திசைகளில் பயணிப்பவர்கள். ஆன்மீக அரசியலை வலியுறுத்தும் ரஜினியும், நாத்திக அரசியல் பேசும் கமலும் அரசியலில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
Next Story