"பின்னணியில் இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" - அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட வழக்கின் பின்னணியில் தான் இருப்பதாக கூறுவது தவறு என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ள நிலையில், துணை வேந்தருக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் சூரப்பா இருப்பதாக, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா, கமலஹாசன் உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார் என்றும், எப்போதும் தானும் உண்மை பக்கம் மட்டுமே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். எந்த தவறும் செய்யவில்லை என்றும், தமக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட வழக்கின் பின்னணியில் தான் இருப்பதாக கூறுவது தவறு என்றும் சூரப்பா தெரிவித்துள்ளார். பின்னணியில் இருந்து செயல்பட வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது என்றும், வழக்கு தொடுத்தவர் யார் என்று கூட தமக்கு தெரியாது எனவும் சூரப்பா தெரிவித்து உள்ளார். மேலும், எதுவாக இருந்தாலும் நேரடியாக, வெளிப்படையாக கருத்து தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் சூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Next Story