சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்
சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இந்தி - சமஸ்கிருத திணிப்பை மட்டுமே மேற்கொண்டு வருவதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமஸ்கிருத செய்தி தொகுப்பை நாள்தோறும் பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தூர்தர்ஷன் மண்டல தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 15 ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படும், வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை தமிழ் மற்றும் பிற மொழி பேசும் மக்களிடம் திட்டமிட்டு திணிப்பது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்க பண்பாட்டு படையெடுப்பாகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமஸ்கிருத திணிப்பை திரும்பப் பெறாவிட்டால் உடைய போவது மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும், அதிகார மமதையும்தான் என ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story