பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் - உயிர்ப்பயம் காட்டி பணம், நகை கொள்ளை

பில்லி, சூனியம், மாந்திரீகம் என உயிர்ப் பயம் காட்டி, 102 பவுன் தங்க நகைகள், 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை சுருட்டிவிட்டு தப்பி ஓடிய பெண் சாமியார், ஓராண்டுக்கு பின் சிக்கியுள்ளார்.
பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் - உயிர்ப்பயம் காட்டி பணம், நகை கொள்ளை
x
சென்னையை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி சுகிதா, கடந்த 2018 ஆம் ஆண்டு பூஜை செய்தபோது, விளக்கில் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நாராயணி என்ற பெண் சாமியார், சிவக்குமாரின் குடும்பத்தில் உயிர்ப்பலி கேட்டு பில்லி, சூனியம், ஏவல் வைத்துள்ளதாகவும், 45 நாட்கள் நகைகளை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். உயிர் பயத்தில் இருந்த சிவக்குமார் குடும்பம், மொத்தம் 102 பவுன் நகைகளை சாமியார் நாராயணியிடம் ஒப்படைத்துள்ளது. இது தவிர பரிகார பூஜைகளுக்காக 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.  

45 நாட்களுக்கு பின்  நகைகளை கேட்டபோது, 365 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் எனவும் பாதியில் நிறுத்தினால் உயிருக்கு ஆபத்து எனவும் மிரட்டியுள்ளார் நாராயணி... இதன் பிறகு, அடையாறு காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளித்ததால், நாராயணி தலைமறைவானார். ஓராண்டாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில், பெரும்பாக்கத்தில் சிக்கியுள்ளார் நாராயணி... 

அவரிடம் விசாரித்த‌தில், நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்த‌தாகவும், மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த‌தாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் நகைகளை வாங்கி அவற்றை உருக்கி, தங்கக் கட்டிகளாக விற்பனை செய்த அடகு கடைக்கார‌ர் ரத்தினலால் அவரது மகன் ஹேம்நாத் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்