மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்
x
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஒருவருக்கு 6 மாதங்களுக்கு முன் மிஸ்டு கால் ஒன்று வந்துள்ளது. அதை அவர் கண்டுகொள்ளாமல் விட்டாலும் பதின்ம வயதில் இருந்த அவரின் மகள் தந்தையின் செல்போனை எடுத்து அந்த எண்ணுக்கு அழைத்துள்ளார். 

எதிர்முனையில் பேசிய நபர் திருப்பூரை சேர்ந்த ரகுபதி என்று தன்னை அறிமுகப்படுத்தவே, இவர்களின் செல்போன் உரையாடல்களும் நீண்ட நாள் தொடர்ந்துள்ளது. 

பல மாதங்களாக தொடர்ந்த இவர்களின் பேச்சு ஒரு கட்டத்தில் காதலில் போய் முடிந்தது. இதனிடையே, கடந்த வாரம் அந்த சிறுமி திடீரென மாயமானார். 

மகளை காணாமல் தவித்த தந்தை, சங்கரன்கோவில் போலீசாரிடம் புகார் அளிக்க, சிறுமியின் தோழிகள் உட்பட பலரிடம் விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறுமியின் தந்தையின் செல்போனை சோதனை செய்த போது தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. 

திருப்பூரை சேர்ந்த ரகுபதி என்பவரின் செல்போனில் இருந்து தொலைபேசி எண்ணுக்கு பல மணி நேரமாக அழைப்பு வந்ததை அறிந்த போலீசார், ரகுபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது சிறுமியை கடத்திச் சென்ற அவர், திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார். 

சிறுமியை கடத்திச் சென்றதாக கொத்தனார் ரகுபதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 
பிள்ளைகள் எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் வளர்வது தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்... 


Next Story

மேலும் செய்திகள்