300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர்வழிப்பாதை கண்டுபிடிப்பு - மன்னர் கால குளங்களை புனரமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு

தஞ்சையில் 300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர்வழிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மாநகரில் 30 பழங்கால குளங்களை புனரமைக்க முடிவு செய்துள்ளது, மாவட்ட நிர்வாகம்.
300 ஆண்டுகள் பழமையான சுரங்க நீர்வழிப்பாதை கண்டுபிடிப்பு - மன்னர் கால குளங்களை புனரமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு
x
தஞ்சையில் 300 ஆண்டுகள் பழமையான  சுரங்க நீர்வழிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மாநகரில் 30 பழங்கால குளங்களை புனரமைக்க முடிவு செய்துள்ளது, மாவட்ட நிர்வாகம்.

டெல்டா மாவட்டமான தஞ்சை, தண்ணீர் நிறைந்த ஊர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இதன் காரணம், தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மிகச்சிறந்த நீர் மேலாண்மை கட்டமைப்புகளை உருவாக்கியது தான்.

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றி நான்கு புறமும், தண்ணீர் செல்லக்கூடிய அகழிகள் அமைத்து, அதில் காவிரி நீரையும், மழைநீரையும் சேமித்தனர். 

பெரிய கோயில் அருகே சிவகங்கை குளமும், நாயக்க மன்னர்கள் காலத்தில் மேலவீதி
அருகே பிரமாண்ட அய்யன்குளமும் உருவாக்கப்பட்டது.

தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை மாநகராட்சியில், 905 கோடி ரூபாய் 
செலவில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதில், நீர் நிலைகளை புனரமைக்கும் பணியின் போது, அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்தை நோக்கி செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடித்துள்ளனர்,அதிகாரிகள்.

மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்வழிப்பாதை, சாலை மட்டத்தில் இருந்து 7 அடி ஆழத்தில் சுற்றிலும் சுடுமண் செங்கல்களால் 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது குளத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை சுரங்கவழிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பாதையில் 7 ஆய்வு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மேலும், பழைய வரைபடம் மூலம் எஞ்சியுள்ள இரண்டு ஆய்வு குழிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள், நீர்வழிப்பாதையை சுத்தம் செய்து, தண்ணீர் எடுத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது தஞ்சை நகரில் 30க்கும் மேற்பட்ட குளங்களை 26 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க, அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்