ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - வின்வெல்த் இன்டர்​​நேஷனல் நிறுவன உரிமையாளர் கைது

கோவையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த வைர வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - வின்வெல்த் இன்டர்​​நேஷனல் நிறுவன உரிமையாளர் கைது
x
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான செரின் என்பவர், மும்பையில் தங்கம், வைர வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது, கோவை சரவணம்பட்டி பகுதியில், வின்வெல்த் இன்டெர்நேஷனல் என்ற பெயரில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்திய அவர், 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வாரந்தோறும் ஆயிரத்து 600 ரூபாய் தருவதாகவும், 25 வாரங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். முதலீட்டு தொகையை, இரட்டிப்பாக தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே, ஒன்றரை லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, கோவையை சேர்ந்த சேவியர் அளித்த புகாரின் பேரில், செரின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, தலைமறைவான செரினை, வாளையார் பகுதியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததும், திருச்சூரில் வீடு, வணிக வளாகம், சொகுசு கார் வாங்கி வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. செரினின் மனைவி ரம்யா மற்றும் ஊழியர்கள் சைனேஷ், ராய், பைஜூ மோன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஆசையை  தூண்டி, மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்