கொரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தும் பாடகர் திருமூர்த்தி

சமூக வலைதளங்களில் அறிமுகமாகி திரைப்பட பின்னணி பாடகரான மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இப்போது கொரோனா முகாமிலும் தன் இசை பயணத்தை தொடர்வதை பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..
கொரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தும் பாடகர் திருமூர்த்தி
x
இப்படித்தான் ஆரம்பித்தது திருமூர்த்தியின் இசைப்பயணம்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையில்லாத மாற்றுத்திறனாளி தான் திருமூர்த்தி. 

கைகளில் கிடைக்கும் கொட்டாங்குச்சி, பாத்திரங்களில் இசை எழுப்பி அதற்கேற்றார் போல பாடல்களை பாடுவது திருமூர்த்தியின் வழக்கம். 

பார்வை போனாலும் அபாரமான குரல் இசையால்  கிராம மக்களின் செல்லப்பிள்ளையாகி போனார் அவர். சினிமாவில் வரும் பாடல்களை எல்லாம் அதே குரல் வளத்துடன் அவர் பாடிய வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பரவியது. 

இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், திருமூர்த்திக்கு சினிமாவில் வாய்ப்பளித்தார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சீறு என்ற படத்தின் திருமூர்த்தியின் குரல் ஒலித்து, அது பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது.

இந்த சூழலில் சொந்த ஊரில் இருந்த திருமூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள முகாமில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முகாமில் உள்ளனர். இங்கிருக்கும் மக்களை தன் இசையால் கவர்ந்து வருகிறார் திருமூர்த்தி. 

கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து இசை எழுப்பி  அதற்கேற்றார் போல பாடல்களை பாடி முகாமில் இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார் அவர்.

கொரோனா தொற்று இருப்பதை மறக்கும் அளவுக்கு முகாமில் இருப்பவர்கள் திருமூர்த்தியின் இசையால் மெய் மறந்து இருக்கின்றனர். இக்கட்டான சூழலை கூட, மகிழ்ச்சியான ஒரு பொழுதாக மாற்றுவது ஒரு கலைஞனால் மட்டுமே சாத்தியம். அதை சரியாக செய்து கொண்டு இருக்கிறார் பாடகரான திருமூர்த்தி.

Next Story

மேலும் செய்திகள்