பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
பிரபல  பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்
x
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த மாதம் 5-ந் தேதி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  சென்னையில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு  செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம்  வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள்  ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 
கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பியின் உடல்நிலையில் வியாழன் இரவு திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் மாரடைப்பால் அவர் காலமானார். இதையடுத்து, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 

பண்ணை இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட எஸ்பிபி உடல்

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற அஞ்சலிக்கு பிறகு இரவு 8 மணி அளவில், எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல், சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள தாமரைப்பாக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு சொந்தமான பண்ணை இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்திலிருந்து எஸ்.பி.பி. உடல் தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்ட வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


நாளை எஸ்பிபி இறுதிச் சடங்கு - பண்ணை இல்லத்தில் நாளை காலை உடல் அடக்கம்


மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு, பண்ணை இல்லத்தில் முதற்கட்ட பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, பண்ணை இல்லத்தில் உள்ள தோட்டத்தை சரிபடுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 
இந்நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு நாளை காலை 11 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

"ஒவ்வொருத்தர் இல்லத்திலும்  ஒலித்த இனிய குரலை இழந்து விட்டோம்" - எஸ்பிபி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் 

இந்தியாவில், ஒவ்வொருவரின் இல்லத்திலும் ஒலித்த, இனிய குரலை, நாடு இழந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது இனிமையான குரல் மற்றும் இசை, பல தசாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது என்று கூறியுள்ள பிரதமர், இசையுலகம் ஏழையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய இசை, அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்து விட்டது"
குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இரங்கல்

இந்திய இசை, அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்து விட்டதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் கூறியுள்ளார்.  எண்ணற்ற ரசிகர்களால் 'பாடும் நிலா' அழைக்கப்படும் எஸ்பிபியின் மறைவு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் கூறியுள்ளார். அவரை இழந்து வாடும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குடியரசுத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

" எஸ்பிபி-யின் மறைவு அதிர்ச்சியாக இருந்தது" - "இருவரும் நெல்லூர் என்பதால், தனிப்பட்ட சோகம்"- வெங்கய்ய நாயுடு

சாதனை பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவு அதிர்ச்சியாக இருந்தது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகத்தை விட்டு மறைந்த அவர், இசை உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் என கூறியுள்ளார். எஸ்.பி.பி.யின் மெல்லிய குரல், மொழிகள் மற்றும் இலக்கியங்கள் மீதான உணர்ச்சி, அன்பு மற்றும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை ஆகியன, தான் உள்ளிட்ட மில்லியன் கணக்கான ரசிகர்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என வெங்கய்ய நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் நெல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது எனக்கு ஒரு தனிப்பட்ட சோகம் என்றும், எஸ்.பி.பி.யின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 
---

புகழ்மிக்க இசைக் கலைஞர் மறைவு - அமித்ஷா

புகழ்மிக்க இசைக் கலைஞர், பின்னணி பாடகர், பத்ம பூஷண் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு பெரும் சோகம் என, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மாற்று இல்லாத தனது இதமான பாடல்களால், எஸ்.பி.பி. தம்மை எப்போதும்  நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்  என்று கூறியுள்ள அமித்ஷா, எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

" தனது இனிய குரலால் அனைத்து இதயங்களை தொட்டவர் எஸ்.பி.பி" - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இரங்கல் 

தனது இனிய குரலால், அனைத்து இதயங்களையும் தொட்டவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தமது இதயப்பூர்வ அஞ்சலி என்று, டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், எஸ்பிபி மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும், நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் - வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே செலவிட்டவர் எஸ்.பி.பி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே செலவிட்ட எஸ்.பி.பி. 4 மொழிகளில் சிறந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என கூறியுள்ளார். பாலசுப்பிரமணியத்தின் மறைவு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 
---


தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு 
அதிர்ச்சி அளிப்பதாக தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மண்ணுலகில் பாடியது போதும் என்று விண்ணுலகம் அழைத்து கொண்டதோ என தமிழிசை தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி.யை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தர்ராஜன், எஸ்.பி.பி.  குரல் இனிமேல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம் என தெரிவித்துள்ளார்.  
===

எஸ்.பி.பி.  பாடல்கள் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்" - "அற்புத குரல் வளத்தால் அனைவரையும் ஈர்த்தவர் எஸ்.பி.பி"  


திரையிசை உலகில் தமக்கென தனியிடம் பெற்ற எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு  சொல்லொனா துயரத்தை அளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  எஸ்.பி.பி. மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது, ஒலித்துக் கொண்டே இருக்கும் 
என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 
தமது அற்புத குரல் வளத்தால் அனைவரையும் 
ஈர்த்து, எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் 
மனதை கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பி. என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
===

எஸ்.பி.பி. மறைவுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல் 

பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்து எஸ்.பி.பி. என்றும், காலம் அவரை பிரித்தாலும் காற்றில் அவரது தேன்குரல்  தவழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த  பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி. என்றும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
===

எஸ்.பி.பி. மறைவு - முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் இரங்கல் - "இசை உலகம் மாபெரும் கலைஞனை இழந்து விட்டது"  

எஸ்.பி.பி. மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தேமதுர தமிழோசை ஓய்ந்தது என்றும்,  திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டதாகவும் ப.சிதம்பரம் தமது டிவிட்டர் பதிவில் 
குறிப்பிட்டுள்ளார். 
===

" எஸ்.பி.பியின் இழப்பு திரை உலகிற்கும் பெரும் இழப்பு" - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இழப்பு, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பெரும் இழப்பு என்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடிக்கணக்கான ரசிகர்கள்,  உள்ளத்தை கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்று கூறினார்.கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்ட போது அவர் மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வேண்டியதாக கூறினார்.

சினிமா உலகின் மேதை எஸ்.பி.பி. - முதலமைச்சர் நாராயணசாமி

சினிமா உலகின் மேதை, புகழ்பெற்ற பாடகர், மெல்லிசை பாடல்களால் மக்களால் போற்றப்பட்டவர் காலமானார் என எஸ்.பி.பி.க்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு இசை உலகிற்கு பேரிழப்பு என்றும், எஸ்.பி.பி.யின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

"சங்கீத துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு"- பினராயி விஜயன்

எஸ்.பி.பி.யின் மறைவு இந்திய சங்கீத துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சங்கராபரணம் படப் பாடலின் உணர்ச்சி ஒலி தான், முதல் முறையாக எஸ்.பி.பி.யை அடையாளம் செய்தது  என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் தனது சொந்த அடையாளத்தை பதிவு செய்த மேதை என உருக்கம் தெரிவித்துள்ளார். தங்களில் ஒருவராக கேரள மக்களின் மனதில் பதிந்தவர் என்றும், தன் குரலால் நிலைத்து நிற்பவர் என்றும் கூறிய அவர் ரசிகர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் இரங்கல்

இதுபோல, பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 
----

Next Story

மேலும் செய்திகள்