வட்டி கேட்ட மூதாட்டியை எரித்து கொன்ற கொடூரம் - ரூ.10 ஆயிரத்துக்காக நடந்த கொடூர கொலை
வட்டி கேட்ட மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து எரித்துக் கொன்ற நெசவுத் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவாங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரின் கணவர் நாராயணசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 65 வயதான இவர் தனியாக வசித்து வந்தார்.
இவரது மகள் கோமதி திருமணமாகி ஒண்ணுபுரம் பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த ராஜேஸ்வரி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.
ஆனால் இவரின் பிரதான தொழிலே வட்டிக்கு பணம் விடுவது தான். சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், இவரிடம் அவசரத் தேவைக்கு வட்டிக்கு பணம் வாங்கி வருவது வழக்கம். வட்டி பணத்திலும் ராஜேஸ்வரி வாழ்ந்து வந்தார்.
கடந்த வாரம் ராஜேஸ்வரி வசித்த வீடு 4 நாட்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதாக அவரது மகள் கோமதிக்கு தகவல் சென்றது. அதன்பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராஜேஸ்வரி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலையாளி யார்? என போலீசார் நடத்தியதில் இவரின் வட்டி தொழிலால் யாருடனும் முன்விரோதம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது தான் கணேசன் என்பவர் மீது சந்தேகம் வரவே, அவர் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்ததால் அவரை தனிப்படை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. நெசவுத்தொழிலாளியான கணேசனுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தன்னுடைய தொழிலுக்காக ராஜேஸ்வரியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கு வட்டியும் கட்டி வந்த கணேசன், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து நின்றுள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களாக வட்டி கட்ட முடியாத சூழல் இருந்துள்ளது. இதனிடையே கணேசனை பார்க்கும் போதெல்லாம் ராஜேஸ்வரி வட்டி கேட்டு வந்துள்ளார். தன் நிலையை பலமுறை சொல்லிப் பார்த்தும் அவர் புரிந்து கொள்ளாமல் போகவே இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற கணேசன், அவரிடம் விளக்கம் அளிக்க முற்படவே, அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் அடிக்கவே அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் பயந்து போன கணேசன், வெளியே சென்று பெட்ரோல் வாங்கி வந்து ராஜேஸ்வரியை எரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு எதுவும் தெரியாதது போல சென்றதாக போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆயிரம் ரூபாய்க்காக நடந்த இந்த கொலை சம்பவம் ஆரணி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது…
Next Story

