(20.08.2020) ஊர்ப்பக்கம்

(20.08.2020) ஊர்ப்பக்கம்
(20.08.2020)  ஊர்ப்பக்கம்
x
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம் - 100க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி பூங்கா எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, மதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

நடிகை ஜோதிகா குறித்து அவதூறு கருத்து பரப்பிய மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீமதி என்பவர் சென்னை காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

நண்பர்களுடன் மது அருந்த சென்றவர் வெட்டிக்கொலை

மதுரை அண்ணாநகரில், நண்பர்களுடன் மது அருந்த சென்ற ஆனந்த் என்ற இளைஞர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது, மதுபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு - 4 மீனவர்கள் மதுரை வந்தனர்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விமானம் மூலம் மதுரை வந்தனர். மீனவர்கள் ஆண்டனி அடிமை, அட்லீ ஜெபா, கவுதம், சாமி அய்யா ஆகிய 4 பேரும், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி எல்லை தாண்டி வந்ததாக கூறி, ஈரான் நாட்டு கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். தன்னார்வலர்களின் தொடர் முயற்சியில், 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினர்.

வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் - 19 பேர் கைது - 9 பெண்கள் மீட்பு

தஞ்சாவூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், விபச்சார தொழில் நடத்தி வந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 3 தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதையடுத்து, 4 வீடுகளில் பாலியல் தொழில் நடத்தி வந்த 19 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடியால், பரபரப்பு ஏற்பட்டது. அளக்கிரி சாலையில் உலா வந்த கரடி, பின்னர் அங்கிருந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அச்சமடைந்துள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கரடியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மதுரை-போடி ரயில் பாதை 2021-ஆம் ஆண்டு நிறைவடையும்" - மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தகவல்

450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் வரும் மதுரை-போடி ரயில் பாதை பணி, 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பாம்பனில் 2,078 மீட்டர்  நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என்றார்.

"இரவோடு இரவாக முறைகேடாக நெல்கொள்முதல்" - விவசாயிகள் குற்றச்சாட்டு  

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் நெல் கொள்முதல் நிலையத்தில் இரவோடு இரவாக, முறைகேடாக நெல்கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பல நாட்களாக காத்துக் கிடக்கும் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை எடுக்காமல், திடீரென வரும் விவசாயி மற்றும் வியாபாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஊழியர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிலிகுண்டுலுவுக்கு  நீர்வரத்து உயர்வு - ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்  

தொடர்மழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், இரு அணைகளில் இருந்தும் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியிலிருந்து  39 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.  இதனால் ஒகேனக்கல்லில் மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், நீர்வரத்து படிப்படியாக உயரும் என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

"கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை மாவட்டம் சேந்தமங்கலம், அய்யனார்குளம், அழகம்மாள்குளம், இலந்தைகுளம், ஆலங்குளம், கஞ்சநாயக்கன் கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விதிமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,இந்த உத்தரவை 10 வாரத்தில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மின்னொளியில் ஜொலித்த பவானிசாகர் அணை - 65 ஆண்டுகள் நிறைவையொட்டி அணைவண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை, கட்டப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பொதுப்பணித்துறை சார்பில், பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  மின்னொளியில் ஜொலித்தது. வண்ண வண்ண விளக்குகளால் அணை அலங்கரிக்கப்பட்ட காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனித்திருவிழா - 7 ஆம்நாளான நேற்று நம்பெருமாள் நெல் அளவை கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனித்திருவிழா 7 ஆம் நாளான நேற்று, நம்பெருமாள் நெல் அளவை கண்டருளினார். பங்குனித்திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.இந்த நிலையில், நேற்று நம்பெருமாள்,திருக்கொட்டரத்தில் உபய நாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளுளினார்.

கொரோனா பாதிப்பால் காவலர் உயிரிழப்பு - 24 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்

கோவையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த காவலரின் உடல் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் மின்ஹாஜூதீன். கொரோனா பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கோவையில், 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த காவல் நிலையத்தில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திருமண நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில், தமிழ்நாடு திருமணம் சார்ந்த தொழில்புரிவோர் சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு விதித்துள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

173 பேர் துபாயில் இருந்து தாயகம் திரும்பினர் - சிறப்பு விமானம் மூலம் மதுரை வருகை

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து 173 புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு விமானம் மூலம் மதுரை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகம் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் சென்ற வட மாநிலத்தவர்கள் தற்போது மீண்டும் பணிக்காக தமிழகம் திரும்பி வருகின்றனர். அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் உரிமையாளர்களே, விமானம் மூலம் பணியாளர்களை அழைத்து வருகின்றனர். அதன்படி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக, ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் மதுரை விமான நிலையம் வந்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கம் - அரசு அனுமதி அளிக்க சிற்ப கலைஞர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலைகள், அரசின் கட்டுப்பாட்டால் விற்க முடியாமல் தேங்கி கிடக்கின்றன. பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, கடந்த 6 மாதமாக சிலைகளை செய்துள்ளதாக கூறும் சிற்ப கலைஞர்கள், விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ளதால், விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதை, தானியங்களுடன் "கிரீன் விநாயகர்" - ஆன்லைன் மூலம் விற்பனையாகும் விநாயகர் சிலை

கோவை மாவட்டம் ரத்தினபுரியில், தானியங்கள் மற்றும் விதைகள் கொண்டு கிரீன் விநாயகர் என்ற பெயரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக, ஆன்லைன் மூலம், பொதுமக்களின் வீட்டிற்கே சென்று சிலைகள் விற்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறும் இளைஞர்கள், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முடியாவிட்டாலும், வீட்டின் தோட்டத்திலேயே கரைக்கலாம் என கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்