(11/08/2020) ஊர்ப்பக்கம்

(11/08/2020) ஊர்ப்பக்கம்
(11/08/2020) ஊர்ப்பக்கம்
x
யானைகள் நடமாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு  - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஊட்டி - தெப்பகாடு சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் குட்டி யானைகளுடன் இரை தேடி  யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே காட்டு யானைகள் அருகில் சென்று செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையில் பரிசோதனை  - 5 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மகளிர் சிறையில் உள்ள  5 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
சிறு குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் ரத்த மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பிற கைதிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரியை நிரந்தரமாக மூட பொதுமக்கள் கோரிக்கை- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  கருவேலம்பட்டி பகுதியில் கல்குவாரியை  நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி 
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்குவாரியிலிருந்து வெளியேறும் மாசுகளால் சுற்றுபுறச் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்த பேச்சுவார்த்தை திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமரசம் எட்டாத நிலையில் கோட்டாட்சியர் சௌந்தர்யா ஒருதலை பட்சமாக செயல்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினார். இதனால் அதிருப்தி அடைந்த கோட்டாட்சியர்  கோப்புகளை வீசி எறிந்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்ததாரரை கத்தி முனையில் மிரட்டி ரூ.9 லட்சம் கொள்ளை - மர்மநபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு  

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஓடிசாவை சேர்ந்த லட்சுமி பிஸ்வால் என்ற  ஒப்பந்ததாரரை கத்தி முனையில் மிரட்டி 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அவர் வங்கியில் பணம் எடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை பின்தொடர்ந்துவந்த 
2 பேர் வழிமறித்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த மர்ம ஆசாமிகளை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு  - பலியானோர் எண்ணிக்கை 81-ஆக அதிகரிப்பு 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட14-வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.   அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனும் 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. 

சுதந்திர தினத்திற்காக தேசிய கொடிகள் தயாரிப்பு பணி தீவிரம் 

சுதந்திர தினத்திற்காக கோவையில் தேசிய கொடிகள் தயாராகி வருகின்றன. வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் தேசிய கொடி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில்  சொற்ப ஆர்டர்களை கொண்டு தேசிய கொடிகளை தயாரித்து வருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

போலீசார் மீது குறை கூறி ஒருவர் மதுபோதையில் ரகளை - வாகனங்களை வழி மறித்து போராட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே பாஸ்கர் என்பவர் ஏலத்தில் கலந்து கொண்டபோது  தான் அவமானப்படுத்தப்படுத்தப்பட்டதாக கூறி அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார்  அளிக்க சென்றுள்ளார். புகார் மனுவை வாங்க போலீசார் நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறி பாஸ்கர் மது போதையில் திண்டுக்கல் மதுரை நான்கு வழி சாலையில் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று புகார் மனுவை பெற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்