"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள  திருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமிகளை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ- பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ - பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
கொரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 



Next Story

மேலும் செய்திகள்