ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் விவகாரம் : கையகப்படுத்த ரூ.67.90 கோடி டெபாசிட்

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவகமாக, மாற்றுவதற்கான இடத்தை கையகப்படுத்த 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாயை, இழப்பீடாக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது.
x
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அந்த இடத்தை கையகப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக, சென்னை தென் மண்டல வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, தீபாவின் கணவர் மாதவன், 
தீபக் தரப்பு வழக்கறிஞர் சுதர்சனம், வருமான வரித் துறை பாக்கிக்காக, வருமான வரித் துறை துணை ஆணையர் ரஜய் ராபின் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதற்கிடையில், தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வேதா நிலையத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி யோசனை தெரிவித்ததை தீபக் தரப்பு வழக்கறிஞர், விசாரணையின் போது சுட்டிக் காட்டினார். வருமான வரித் துறை தரப்பில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 ரூபாய்காக, வேதா நிலையத்தை முடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீட்டு உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் கீழ், போயஸ்தோட்டத்து கட்டிடங்களுக்கு 2 கோடியே 73 லட்சம் ரூபாயும், மரங்களுக்கு 11 ஆயிரத்து 47 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நிலத்திற்கு சதுர அடிக்கு 12 ஆயிரத்து 60 ரூபாய் வீதம், 24 ஆயிரத்து 322 சதுர அடிக்கு, 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும்,  நூறு சதவீத கூடுதல் இழப்பீடாக 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும் சேர்த்து மொத்தம் 58 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரத்து 640 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கட்டிடங்களுக்கான மதிப்பீடு மற்றும் மரங்களுக்கான மதிப்பீடும் நூறு சதவீத கூடுதல் இழப்பீடு சேர்த்து 5 கோடியே 47 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. கூடுதல் 12 சதவீத சந்தை மதிப்பாக 3 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரத்து 359 ரூபாய் கணக்கிட்டு, 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவது மற்றும் இழப்பீடு விவகாரத்தில், தீபா, தீபக் தரப்புடன் உடன்பாடு எட்டப்படாததால்,சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டார்.  மேலும், இந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் செலுத்தும்படியும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாயை, இழப்பீடாக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்