ரூ.1000 கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - பெண்ணை மிரட்டி பாலியல் வன்முறை செய்த கொடூரம்

நாமக்கல்லில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கந்து வட்டிக்காரர் ஒருவருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1000 கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - பெண்ணை மிரட்டி பாலியல் வன்முறை செய்த கொடூரம்
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கந்துவட்டி சிவகுமார் என்ற பெயர் பிரபலம். பணம் தேவை என வருவோரிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டி வட்டி வசூல் செய்வது இவரின் வழக்கம். இவரைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாத 19 வயது இளம் பெண் ஒருவர் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒரு வாரத்தில் வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக கூறிய அந்த பெண், உரிய நேரத்தில் பணத்தை கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என பலே திட்டம் தீட்டிய கந்து வட்டிக்காரர் சிவகுமார், அந்த பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி தனியாக ஒரு இடத்திற்கு வரழைத்துள்ளார். அங்கு அவரிடம் பணத்தையும் வட்டியையும் கேட்டு மிரட்டியிருக்கிறார் சிவகுமார். 

தன்னிடம் பணம் இல்லை என கூறிய அந்த  பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்முறை செய்துள்ளார் சிவகுமார். இதனை சிவகுமாரின் நண்பர் ஆமையன் என்கிற ரவி செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் ரவியும் அந்த மாணவியிடம் அத்துமீறவே, அதை செல்போனில் பதிவு செய்து கொண்டார் சிவகுமார். இதை வைத்து மிரட்டி அந்த பெண்ணை பணியவைக்கலாம் என நினைத்து பாலியல் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் பதறிப்போனார் அந்த பெண். வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்த அந்த பெண்ணுக்கு உதவ முன் வந்தார் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வேண்டி பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார் அவர். ஆனால் கந்துவட்டி கும்பல் வேலுசாமிக்கு மிரட்டல் விடுத்ததுடன் ஒரு கட்டத்தில் அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு திரும்பிய வேலுசாமி  கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு தான் பெண்ணுக்கு நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவான இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே சிவக்குமாருக்கும், அவருடன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆமையன் என்கிற ரவிக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இதில் ஆமையன் என்கிற ரவியை 2013ல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார் சிவக்குமார். 2010ல் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 2011ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் நாமக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளி சிவகுமாருக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர் 13 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கந்துவட்டி வசூல் மன்னனான சிவகுமார் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ள நிலையில் பெண்ணுக்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்