ராணுவ வீரர் குடும்பங்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல் - சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி

சிவகங்கையில் அடுத்தடுத்து ராணுவ வீரர்களின் குடும்பங்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ராணுவ வீரர் குடும்பங்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல் - சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி
x
கடந்த 14ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியில் ராணுவ வீரர் ஸ்டீபனின் வீட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் 2 பேரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்த கும்பல், 70 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியின் உச்சம்... ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என பேசப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை போலீசாரால் நெருங்கவே முடியவில்லை. இதனிடையே, மீண்டும் ஒரு சம்பவம் அதே மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது. அதுவும் 10 நாட்களுக்குள் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம். சிங்கம்புணரி அருகே உள்ள மருதிபட்டியில் வசித்து வந்த நாகசுந்தரம் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். தன் மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என வசித்து வந்த இவரின் வீட்டுக்குள் முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக நுழைந்தது. வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அவர்கள், பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதிலும் பெண்கள் கையில் அணிந்திருந்த மோதிரம் இறுகிய நிலையில் இருந்தபோதும் சோப்பு போட்டு அதை கழற்றி தருமாறு கொள்ளை கும்பல் மிரட்டி வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்களை தாக்க முயன்ற நாகசுந்தரத்தின் மகன் வெங்கடேசனை அந்த கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியே கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது அந்த கும்பல்.  அதிலும் தாங்கள் எந்த வகையிலும் சிக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர்கள், சிசிடிவி கேமராக்கள், கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் இவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாட்களில் அடுத்தடுத்து ராணுவ வீரர்களின் குடும்பங்களை குறிவைத்து கொள்ளை கும்பல் நடத்தி வரும் தாக்குதலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்