காவல் உதவி ஆய்வாளர் தேர்வு ரத்து செய்ய கோரிய மனு : "விதி மீறல் நடைபெற்றதா? - அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் விதி மீறல் நடைபெற்றதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உதவி காவல் ஆய்வாளர் பணியிடத்திற்காக ஜனவரி 12, 13ம் தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்ய கோரி, மதுரையைச் சேர்ந்த தென்னரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுரேஷ் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்வு நடந்து முடிந்து, 4 மாதங்கள் தாமதமாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, இது ஏற்கத்தக்கதல்ல என்றார். மனுதாரர் தரப்பில், ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற பலர் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக கூறினார். அதற்கு நீதிபதிகள்," ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறுவது எப்படி முறைகேடாகும்? என கேள்வி எழுப்பினர். விசாரணையின் முடிவில் தேர்வில் விதிமீறல் ஏதும் நடைபெற்றதா? என்பது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story

