மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, எத்தனை சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அமைத்தது. அந்த குழு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரையை சமர்ப்பித்தது. இதையடுத்து, அதை ஆய்வு செய்த தமிழக அரசு, 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பின்னர், அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கும் நீட் தேர்வில் 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டிலேயே உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் இதன் மூலம், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 400க்கு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

