கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்
x
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்தவர் மோகன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி விஜயா. இவர்களுக்கு தமிழ்செல்வி என்ற மகள் உள்ள நிலையில் அவர் திருமணமாகி தன் கணவருடன் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வியின் பிள்ளைகள் 2 பேரையும் தாத்தா, பாட்டியான மோகனும் விஜயாவும் தங்கள் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை கவனித்து வந்த மோகனுக்கு ஊரடங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே மகளின் திருமணத்துக்காக வாங்கிய கடன் ஒரு பக்கம் நெறிக்கவே, ஊரடங்கால் வேலை இல்லாததால் வருமானமின்றி தவித்து வந்தார் மோகன். இது ஒருபுறமிருக்க தன் கணவரின் கடனை அடைக்க விஜயா, சுய உதவிக்குழுக்களின் மூலமாகவும் கடன் வாங்கியிருந்தார். அடுத்தடுத்து நெருக்கடிகள் தொடரவே அன்றாட பிழைப்பை நடத்துவதே இருவருக்கும் சிரமமாகி போனது. பேரப்பிள்ளைகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியாத இருவரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து தங்கள் பேரப்பிள்ளைகள் 2 பேரையும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தங்கள் மரணத்துக்கான காரணம் என்ன என்பதை தெளிவாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் உயிரிழந்த நிலையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையே இவர்களின் உயிரை குடித்ததாக கூறி ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. உயிரிழந்த மோகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அன்றாட வருமானத்தை நம்பி பிழைப்பை நடத்தி வந்த ஒரு தம்பதியின் உயிரை ஊரடங்கு குடித்திருப்பது சோகத்தின் உச்சமே... 


Next Story

மேலும் செய்திகள்