சாத்தான்குளம் விவகாரத்தில் கைது - மனச்சோர்வுடன் கலக்கமான மனநிலையில் போலீசார்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு அவர்கள் மனச்சோர்வுடன் கலக்கமான மனநிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாத்தான்குளம் விவகாரத்தில் கைது - மனச்சோர்வுடன் கலக்கமான மனநிலையில் போலீசார்
x
சாத்தான்குளம்  விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகிய 4 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.மற்றொரு காவலரான முத்துராஜை போலீசார் தேடி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைதான 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 300 பேர் வரை அடைக்க வசதியுள்ள இந்த சிறையில் தற்போதைய சூழலில் 80 பேர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு பிளாக்குகளை கொண்ட இந்த கிளைச் சிறையில், ஒரே பிளாக்கில் கைதான 5 போலீசாரும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறைக்கு கொண்டு வரப்பட்ட ஆய்வாளர் உட்பட ஐந்து பேருக்கும் சிறைச்சாலை நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உடலில் இருந்த கயிறுகள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களை சிறைத்துறையினர் கைப்பற்றினர். அதன்பின் 5 பேருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு அறைகள் வழங்கப்பட்டு தனித்தனியே சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளரான ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட அன்று மிகுந்த மனச் சோர்வுடன் இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் மற்ற காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதே நிலையில்தான் இருந்ததாக கூறப்படுகிறது.. சிறைச்சாலை நடைமுறைகளின்படி சிறைவாசிகளுக்கு வழங்கக்கூடிய உணவு தான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணி செய்து கைது செய்யப்பட்ட 5  பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் அனைத்து சிறைவாசிகளுக்கும் காலை உணவாக இட்லி அல்லது பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மதியம் சாதம், சாம்பார் அல்லது ஏதேனும் ஒரு குழம்பு மற்றும் கூட்டுடன் உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் இரவு உப்புமா அல்லது ஏதேனும் ஒரு சிற்றுண்டி வழங்கப்படுவது வழக்கம். அதே நடைமுறையை பின்பற்றி கைதான 5 போலீசாருக்கும் உணவு வழங்கப்படுகிறது. சிறையில் உள்ள போலீசார் 5 பேருக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து உணவுகளை சிறைத்துறையினர் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிறையில் உள்ள போலீசார் உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டதாகவும், கலக்கமான மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறையில் ஒரே பிளாக்கில் இவர்கள் இருந்தாலும் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேச கூட வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விவகாரம் இது என்பதால் சிறையில் உள்ள போலீசாரை கவனமாக கையாள வேண்டும் என சிறைத்துறையினருக்கு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்