"ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஜனநாயகத்திற்கு விரோதமானது" - மத்திய அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும், மோடி அரசின் முயற்சி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என தி.மு.க. விமர்சித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஜனநாயகத்திற்கு விரோதமானது - மத்திய அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
மாநில உரிமைகள், விவசாயிகள்  கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்க முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பொதுவான ஒரு அறிவிப்பை காரணம் காட்டி,  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு  கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி,  கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும் கேலி செய்யும் மிகப் பின்னடைவான நடவடிக்கை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.ஏற்கனவே இதுதொடர்பாக மார்ச் 3-ம் தேதி மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாத நிலையில், கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி,  இதுபோன்றதொரு மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்து கைப்பற்றும் மத்திய அரசின் செயல் ஆரோக்கியமற்ற செயல் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தனது சொந்த அரசியல் லாபத்திற்காக கூட்டறவு வங்கிகளை பயன்படுத்திக் கொள்ள  கொண்டு வர முனைந்துள்ள அவசர சட்ட முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்