கணவனை அடித்துக் கொன்று எரித்த மனைவி - 9 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கிய சம்பவம்
கடலூர் அருகே ஒரு கொலை வழக்கு 9 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. சடலத்தை கைப்பற்றி விசாரித்த போது அவர் கடலூர் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? தற்கொலையாக இருக்குமோ? என குழப்பம் ஏற்பட்டதால் வழக்கும் நிலுவையில் இருந்தது. ஆனால் ஸ்ரீதரனின் மனைவி சுதாவின் செல்போன் போலீசார் எண்ணை ரகசியமாக கண்காணித்ததில் அதே ஊரை சேர்ந்த சிவராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரம் அழைப்புகளுக்கு மேல் பேசியது தெரியவந்தது.
யார் இந்த சிவராஜ் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது தான் திடுக்கிடும் உண்மையும் வெளியானது. சுதாவும் சிவராஜூம் கள்ளக்காதலர்கள் என்பதும், இந்த உறவுக்கு கணவர் ஸ்ரீதரன் இடையூறாக இருந்ததால் அவரை அடித்துக் கொன்று எரித்ததும் தெரியவந்தது.
இவர்களின் உறவு குறித்து தகவல் தெரியவரவே, ஸ்ரீதரனின் தம்பி சீனிவாசன், கள்ளக்காதலன் சிவராஜை கண்டித்துள்ளார். அப்போது சீனிவாசனை சிவராஜை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் வேலை கனவில் இருந்த சிவராஜூக்கு வழக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததால் 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்றார்.
இதையடுத்து சிவராஜ்க்காக கள்ளக்காதலி சுதா 3 லட்ச ரூபாயை திரட்டி அதை தன் கணவன் மற்றும் கொழுந்தனிடம் கொடுத்து வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளார். ஆனாலும் இந்த வழக்கில் சிவராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு போலீஸ் வேலை கிடைக்கவில்லை. இதனால் ஸ்ரீதரன் மீது ஆத்திரத்தில் இருந்த சிவராஜ், இந்த கொலையை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
சுதாவும், சிவராஜூம் சேர்ந்து ஸ்ரீதரனை அடித்துக் கொன்று எரித்துள்ளனர். இப்போது 2 பேரை கைது செய்த பிறகே அனைத்து சம்பவங்களும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Next Story

