பிறந்த 6 நாளில் எருக்கம்பால் கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்...

தேனி அருகே பிறந்து 6 நாளில் பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
பிறந்த 6 நாளில் எருக்கம்பால் கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்...
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கவிதா. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் 3வதாக கருவுற்ற கவிதா தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என ஆசையோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கவிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை ஆசையில் இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியான அவர், குழந்தையை வெறுக்க தொடங்கி இருக்கிறார். 

இதனிடையே கடந்த 2ஆம் தேதி குழந்தை திடீரென இறந்துவிட்டதாக கூறி வீட்டுக்கு அருகே குழி தோண்டி புதைத்து இருக்கிறார் கவிதா. ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் எழவே, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்திய போதுதான் நடந்த சம்பவங்கள் எல்லாம் வீதிக்கு வந்தது. 3வதாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த கவிதாவும், அவரது மாமியார் செல்லம்மாளும் சேர்ந்து எருக்கம்பால் கொடுத்து கொன்றதாகவும் தெரியவந்தது. 

3 பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது எப்படி? என கேட்டு தன் மருமகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் செல்லம்மாள். இதனால் விரக்தி மனநிலையில் இருந்த கவிதா, தன் மாமியாருடன் சேர்ந்து பிஞ்சு குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல இருந்துள்ளார். போலீசாரிடம் கவிதாவும், அவரது மாமியார் செல்லம்மாள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரையில் இதே போல் பெண் சிசுக்கொலை நடந்தது. அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது தேனியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

கள்ளிப்பாலும், எருக்கம்பாலும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக்குடிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்