நாயகன் படப்பாணியில் தங்கம் கடத்தல் - கடலுக்கு அடியில் தங்கத்தை போடும் கடத்தல்காரர்கள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கக்கட்டிகளை நாயகன் பட பாணியில் கடலுக்கு அடியில் மறைத்து கடத்தல்காரர்கள் கடத்துவது அம்பலமாகியுள்ளது.
நாயகன் படப்பாணியில் தங்கம் கடத்தல் - கடலுக்கு அடியில் தங்கத்தை போடும் கடத்தல்காரர்கள்
x
நாயகன் படத்தில் வரும் இந்த காட்சி போன்று, நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ராமேஸ்வரம் தீவு இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அத்துமீறி வந்ததாக  இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் திசை மாறி வந்துவிட்டதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக  கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கைதான இலங்கை மீனவர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது  அவர்கள் தங்கம் கடத்தி வந்தது உறுதிப்படுத்தப்பட்டது . இதனையடுத்து  படகிலேயே மறைத்து வைத்திருந்த 3 கிலோ தங்கத்தை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது ஃபரூக் , ஆஷிக் ஆகிய 2 பேரும் சந்தேகத்திற்கிடமாக படகிலிருந்து இறங்கி சென்றனர். அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் , இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  அதிகாரிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தங்க கட்டிகளை மணாலி  தீவு அருகே கடலில் போட்டுவிட்டு, அந்த இடத்தை ஜிபிஎஸ் கருவியில் பதிவு செய்து கொண்டதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மூலம்  கைதான 2 பேரையும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதனையடுத்து கடலுக்கு அடியில் கிடக்கும் தங்கத்தை ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற  வீரர்கள் மூலம் அதிகாரிகள்  கைப்பற்றினர். 
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வந்த தங்கம் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வரி கட்டாமல் கொண்டு வரப்பட்டது என தெரிய வந்தது. அந்த தங்கத்தின் எடை 15 கிலோ என்பதும், இதன் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் கடல் வழி கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்