வங்கியில் கடன்பெற லஞ்சம் வழங்கிய வழக்கு: முன்னாள் எம்.பி உள்பட 3 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
வங்கி கடன் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், அவரது மகன் உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தனியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி விரிவாக்கத்திற்காக, அதன் அறங்காவலரான ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 20 கோடி கடன் பெற விண்ணப்பித்தார். அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, வங்கி மேலாளருக்கு, 2 லட்சத்து 69 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி லிங்கேஸ்வரன், இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, வங்கி கடன்பெற லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை விபரங்கள் பிற்பகலில் அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Next Story

