3 ஆண்டுகளில் 16, 382 கையெழுத்திட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளில் 16, 382 கையெழுத்திட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் தொடர் முயற்சியால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை  தூர்வார குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 930 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 955 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும்,  83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட்டதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலம் 22 ஆயிரத்து 96 கோடி ரூபாய் செலவில் 21 ஆயிரத்து 109 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 921 புதிய பேருந்துகளும், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகளும், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகளும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டகளில் 250 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாகவும், 202 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மழலையர் கல்வியை மேம்படுத்த 2 ஆயிரத்து 381 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 58 ஆயிரத்து 654 இளைஞர்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி அளிக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 992 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளின் நலனுக்காக 231 புள்ளி 72 கோடி ரூபாய் செலவில் குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 9 லட்சத்து 83ஆயிரத்து 435 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இது போல் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு, துறைவாரியாக பட்டியலிட்டு விரிவாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்