சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அக்குடியிருப்பில் பணியாற்றிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 2019 ஜனவரி மாதம் முதல் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 36 சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தோட்டக்காரர் குணசேகரனை விடுவித்து உத்தரவிட்டது. இவர்களுக்கான தண்டனை விபரங்கள் பிப்ரவரி 3ம் தேதி தெரிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
Next Story

