"ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு என்று அறிக்கை வெளியிட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு என்று அறிக்கை வெளியிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், அதற்காக தமது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டியால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும் என்றும், குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும்  அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற தவறி விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9ஆயிரத்து 270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும்,  2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட "ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையான சுமார் 5 ஆயிரத்து 909 கோடி ரூபாய்  நிலுவை தொகை பெறப்பட்டதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஸ்.டி சட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு? நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் உடனடியாக அறிக்கை  வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்