அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
x
வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சேலத்தை சேர்ந்த கட்சி உறுப்பினர் சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாமல் விதிகளுக்கு மாறாக கட்சி பதவிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். வரும் 24-ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உட்கட்சி தேர்தலை நடத்த கட்சியின் அவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை என்றும், சின்னங்கள் தொடர்பான பிரச்சினை எழும் போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும் எனவும் விளக்கமளித்தார்.அரசியல் கட்சிக்கு உத்தரவிடக் கோரி ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினர். இதையடுத்து, மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்