பேனர் கலாசாரத்தால் ஒரே மகளை இழந்து விட்டேன் - ரவி சுபஸ்ரீயின் தந்தை

வெளிநாட்டு வேலைக்கு தயாராகி வந்த 23 வயது இளம்பெண் பேனர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
x
சென்னை குரோம்பேட்டை, பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே செல்ல மகள் சுபஸ்ரீ.  23 வயதான சுபஸ்ரீ கடந்த ஆண்டு பிடெக் முடித்ததுடன், கந்தன்சாவடியில் உள்ள  தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கனடா செல்வதற்காக விண்ணப்பித்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு நேற்று , பள்ளிக்கரணை சுற்றுச் சாலை வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்துள்ளார்.

அந்தப் பகுதி சாலை நெடுக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையில் இரு புறங்களில் மட்டுமல்லாமல் சாலையை மறைக்கும் விதமாக நடுபகுதியிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த பேனர், மோட்டார் சைக்கிளில் சென்ற  சுபஸ்ரீ மீது சரிந்ததில்,  நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர்  கீழே விழுந்த நேரத்தில்,பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.


நிமிடத்தில் நடந்த இந்த சம்பவம் பார்த்தவர்களை உறைய வைத்த நிலையில், சம்பவத்தை கேள்விப்பட்டு  அவரது பெற்றோர் கதறி துடித்தது அனைவரது நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது.

பேனர் கலாச்சாரத்துக்கு தனது ஒரே மகளை இழந்து தவிப்பதாக   சுபஸ்ரீயின் தந்தை ரவி கதறியது கல் நெஞ்சக் காரர்களையும் கரைத்து விடும்.

பேனர் வைத்தது தொடர்பாக யாரும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக பீஹாரை சேர்ந்த 25 வயது லாரி டிரைவர் மனோஜ் போலீசார்  கைது செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு இதே போல கோவையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு விழுந்ததில் வெளிநாடு செல்ல இருந்த பொறியாளர் ரகு உயிரிழந்தார்.

இது தொடர்பாக தானாக வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையை விடுத்திருந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.





Next Story

மேலும் செய்திகள்