பல்கேரிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னை காரப்பாக்கம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பல்கேரியாவை சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளளது.
பல்கேரிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
x
கடந்த 4 நாட்களாக சென்னை காரப்பாக்கம் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த பல்கேரிய நாட்டை சேர்ந்த 3 கொள்ளையர்களும்  அருகில் உள்ள ஏ.டி.எம்.களில்  ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, போலி ஏ.டிஎம். கார்டுகளை தயார் செய்து பணத்தை திருடிவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி இருந்துள்ளனர். பின்னர்  ஏ.டி.எம்.களில் எடுத்த பணத்தை நட்சத்திர விடுதியில் உள்ள ரகசிய லாக்கரில் வைத்து மூடியுள்ளனர். பின்னர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் லாக்கரின் பாஸ்வேர்டை மறந்து ஹோட்டல் நிர்வாகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதனை சரி செய்வதற்காக பொறியாளர் ஒருவரை ஹோட்டல் நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதனையடுத்து பொறியாளர் லாக்கரை திறந்த போது, இந்திய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் சிதறி கிடந்துள்ளன. மேலும் ஏராளமான ஏ.டி.எம். கார்டுகளும்  இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொறியாளர் ,ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக போலீசாருக்கு ஹோட்டல் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
இதனிடையே, வழக்கம் போல் ஏடிஎம்களில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை திருடிக்கொண்டு சாவகாசமாக கொள்ளை கும்பல் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளது.  அப்போது அங்கே காத்திருந்த கண்ணகி நகர் போலீசார், 3 பேரையும்  கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏ.டி.எம்.களில் பணத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.  பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவர்கள் வாட்ஸ் ஆப்பில் பரிமாறி கொண்ட தகவல் பல்கேரிய மொழியில் உள்ளதால் அதனை மொழிபெயர்க்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்