தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி பற்றாக்குறை காரணமாக தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
சட்டப்பேரவையில் பதிலுரை அளித்த போது பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதிப்பகிர்வில், 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசு , தனது திட்டங்களில் 75 சதவீதமாக இருந்த பங்கை 60 சதவீதமாக குறைத்தது நிதிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகவும் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 3,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை இதன் விளைவாக ஏற்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். கல்வி உதவிதொகை திட்ட மாற்றத்தால் தமிழக அரசின் நிதிச்சுமை ஆண்டுக்கு 354 கோடி ரூபாயிலிருந்து ஆயிரத்து 527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் கடனான 22 ஆயிரத்து 815 கோடி ரூபாயை தமிழக அரசு தனது கடனாக ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும், நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஆண்டிற்கு கூடுதலாக 6 ஆயிரத்து 342 கோடி ரூபாய் வட்டி தொகை கட்டுவதிலும், மானியம் வழங்குவதிலும் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், தமிழக அரசு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது என்றும், இதன் காரணமாக, ஆண்டுக்கு 14 ஆயிரத்து 719 கோடி அளவிற்கு கூடுதல் செலவினத்தை அரசு ஏற்றுள்ளதோடு, கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் போது துயர் துடைப்பு பணிகளுக்காக எதிர்பாரா செலவினத்தையும் அரசு ஏற்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்