பி.ஏ. பட்டதாரி, ஹாக்கி வீரர் தகுதிகளுடன் திருட்டு - சிசிடிவியில் சிக்காமல் இருக்க, தனி பாணி

பி.ஏ. பட்டதாரி, ஹாக்கி வீரர், கழிவறையில் உறக்கம் என விந்தையாக வாழ்ந்து வந்த 53 வயது சுவர் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பான ருசிகர தகவலும், போலீசில் சிக்கியது குறித்தும் ஒரு பார்வை...
பி.ஏ. பட்டதாரி, ஹாக்கி வீரர் தகுதிகளுடன் திருட்டு - சிசிடிவியில் சிக்காமல் இருக்க, தனி பாணி
x
சென்னையில், கடந்த 20 ஆண்டுகளாக திருட்டை மட்டுமே முழுநேர தொழிலாக கொண்டு, பல்வேறு வீடுகளில் பூட்டை திறந்து சூறையாடுவதில் கில்லாடி இந்த 53 வயதான ஆரி பிலிப் என்கின்றனர் போலீசார். பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவன் சேலையூரை பூர்வீகமாக கொண்டவர் என்றும், சென்னையில் மட்டும் இவர் மீது, 40க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்றும் கூறுகின்றனர் போலீசார். 2016ம் ஆண்டு தாம்பரம் மற்றும் சேலையூர் போலீசார், குண்டாஸ் சட்டத்தின் கீழ் இவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

​சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கழிவறையில் தலைமறைவுக்காக தஞ்சம் புகுந்திருந்த ஆரி பிலிப், நீண்ட கண்காணிப்புக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த தகவல்கள் போலீசாரே வியக்கும் ரகம். சென்னை அபிராமபுரம், ஜி.என்.ஷெட்டி சாலை என இவர் கைபடாத கதவுகள் குறைவு. எப்போதும் மதுபோதையில் இருக்கும் ஆரிப், கே.கே. நகரில் உள்ள வீட்டில் திருடிவிட்டு அங்கேயே தூங்கிய ருசிகர சம்பவமும் அரங்கேறியது. அழுக்கு சாக்கும், அதற்குள் மறைத்த கடப்பாரையுடன் நகரை வலம் வரும் அவர், ஆளில்லா வீடுகளை தேர்வு செய்து களமிறங்கியுள்ளார் இந்த குண்டாஸ் குற்றவாளி.

சிசிடிவியில் சிக்காமல் இருக்க, 7 வீடுகளுக்கு முன்பாகவே சுவரின் மீது ஏறி, அதன் வாயிலாக திருடப்போகும் ஆளில்லா வீட்டை அடைவேன் என்று ஆரி பிலிப் கூறியுள்ளார். திருடியதை, 2 மனைவிகளுக்கும் சரிபங்கு வைப்பாராம். எப்போதும் மது மயக்கத்தில் இருக்கும் ஆரிப், போலீசாரின் பிடியில் இருந்து தப்ப கழிவறையிலேயே வாழ்ந்துள்ளார். போலீசாரின் துரத்தலில் சிக்காததால், எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறாய் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், நம்மை வியக்க வைக்கிறது. 

போலீசாரிடம், தாம் ஒரு ஹாக்கி பிளேயர் என்றும், தமது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் அதிர்ச்சி அளித்துள்ளார். மதுவும், போதை ஊசிகளும் அவருக்கு தேவையான ஆதாரம். பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் தங்கியதாகவும் ஆரி பிலிப் கூறியது மற்றொரு ருசிகரம். பி.ஏ. பட்டம், ஹாக்கி பிளேயர் என்ற தகுதிகளை விடுத்து, மதுவும், திருட்டும் என அழுக்குச் சட்டையும், அவப்பெயருமாக கழிவறையில் வாழ்ந்ததும் ஒருவகையில் சோகமே. 

Next Story

மேலும் செய்திகள்