கோலாகலமாக தொடங்கியது அத்திவரதர் உற்சவம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவ விழாவை ஒட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்க்கலாம்
x
காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை மொத்தம் 48 நாட்கள் நடைபெற உள்ளது.முதல் 24 நாட்களில் அத்திவரதர் படுக்கை நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் அருள்பாலிக்க உள்ள இந்த திருவிழா 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், லட்சக் கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு வெளியே ஓரிக்கை,ஒலிமுகமதுபேட்டை,பச்சையப்பன் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் தற்காலி பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.10 ரூபாய் கட்டணத்தில் கோயில் வரை 20 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில்,  செங்கல்பட்டு, அரக்கோணம் ரயில் சந்திப்புகளை இணைக்க சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.கார், பைக் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை.உள்ளூர் வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சாலை நெடுகிலும் முக்கிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.குடிநீர் வசதிக்காக ஐந்தாயிரம் மற்றும் இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நூறு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.பேட்டரி கார்கள், மாற்றுத் திறனாளி மற்றும் முதியோருக்காக சக்கர நாற்காலி வசதிகள் உள்ளன.பக்தர்கள் அனைவரும் கிழக்கு கோபுரம் வழியாக உள்நுழைந்து,மேற்கு கோபுரம் வழியாக வெளியேறலாம்.இலவச தரிசனங்கள் ஒருவழியில் நடக்க, 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கான தனி வரிசையும் உண்டு.காஞ்சிபுரம் தாலுகா பக்தர்களுக்கு குறிப்பிட்ட 26 நாட்கள் மட்டும் சிறப்பு வரிசை அனுமதி உண்டு.ஆன்லைன் மூலம் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிந்த 500 பேருக்கு மட்டும் சகஸ்ர தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறப்பு மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் சேவை, காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் உத்தரவு என சிறப்பு ஏற்பாடுகளுடன் அத்திவரதர் வைபவ ஏற்பாடுகளால் மாநகர் களைகட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்