நிலத்தடி நீர் வழங்குவதற்கான கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தாவிட்டால் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும் - விவசாயிகள்

நிலத்தடி நீர் வழங்குவதற்கான கட்டணத்தை 5 ரூபாயாக அரசு உயர்த்தி தராவிட்டால் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
x
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வறட்சியின் காரணமாக முற்றிலுமாக வறண்டு விட்டதால் சென்னையில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து சென்னைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாகறல், கீழனூர், காவனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 316 ஆழ்துளை கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கு விவசாயிகளுடன் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் மோட்டார்களுக்கான மின் கட்டணத்தை அரசே மின்வாரியத்திற்கு செலுத்தி வருவதோடு ஆயிரம் லிட்டர் நீருக்கு 2 ரூபாய் 50 காசு வீதம் கட்டணமாக விவசாயிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம்  வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 கோடி லிட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நிலத்தடி நீர் எடுக்க பயன்படும் மோட்டார்கள் பழுதடைந்தால் அதன் பராமரிப்பு செலவையும் தாங்களே ஏற்க வேண்டி உள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், நிலத்தடி நீர் எடுக்க வழங்கப்படும் கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தி தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள் இல்லையெனில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் சென்னைக்கு மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்