தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்
x
பேராசிரியர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்வித்துறைக்கான முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மருத்துவ கல்வித்துறைக்கான பரிந்துரையில் எம்.பி.பி.எஸ். படிப்பின் நான்காம் ஆண்டு இறுதியில் ஒரு வெளியேறும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அது மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நுழைவு தேர்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எம்.பி.பி.எஸ் படிப்பின் முதல் 2 ஆண்டுகளை நர்சிங் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவத்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படை பாடப்பிரிவாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவம் மற்றும் நர்சிங்பிரிவு மாணவர்களும் எம்.பி.பி.எஸ்.படிப்பிற்கு இடை நுழைவு மூலம் சேரலாம் என்றும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தொழில்நுட்ப கல்வித்துறையில் பொறியியல், கட்டிடக்கலை, நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பாடதிட்டத்தை சீரமைத்து மேம்படுத்த அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப படிப்புகளில் இடைநிலை சேருதலை சாத்தியப்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்த ஊக்கப்படுத்தப்படும் என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தரசான்று பெற்ற அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரி செயல்படும் என்றும் 50 சதவீத மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையிலான கல்வி உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சட்டக்கல்வி இருமொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், 
இதன் மூலம் எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து உள்ளூர் மொழியில் மொழி பெயர்க்கவும் உள்ளூர் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் குழு அமைக்க வேண்டும் என்றும் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாய கல்வித்துறை பல்துறை கல்வியாக மாற்றப்படும் என்றும் தோட்டக்கலை, மீன்வளர்ப்பு, கால்நடை மருத்துவம், உணவு உற்பத்தி போன்றவை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மாணவர்களின் நடைமுறை கல்வியறிவு மேம்படுத்தப்படும் என்றும் விவசாய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்