பழைய துணிகளை வாங்க வருபவர்களிடம் உஷார்...

சென்னையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாக கூறி பழைய துணிகளை வாங்கி சென்று 11 லட்ச ரூபாயை ஏமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய துணிகளை வாங்க வருபவர்களிடம் உஷார்...
x
கடந்த 13ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதிக்கு ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று திருவள்ளூர் அருகே அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் இலவசமாக சேவை செய்வதாகவும், அதற்கு இயன்ற உதவிகளை வழங்குமாறும் துண்டு பிரசுரங்களை கொடுத்து வீடு வீடாக சென்று பழைய துணி மற்றும் சிறிய அளவிலான தொகைகளை பெற்றுச் சென்றுள்ளனர். 

அதன்படி, தேனாம்பேட்டையில் வீட்டு வேலை செய்து வரும் சுசீலா என்பவரது வீட்டுக்கு அந்த கும்பல் சென்றுள்ளது. அப்போது வீட்டில் இருந்த சுசீலாவின் மகன் அறக்கட்டளையை சேர்ந்த பெண்ணிடம் பழைய துணி மூட்டை ஒன்றை கொடுத்துள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் பழைய துணி மூட்டையை மகன் அளித்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுசீலா கதறி அழுதுள்ளார். அவரது அழுகைக்கு காரணம் குறித்து விசார்த்தபோது தான் அந்த உண்மை தெரிந்தது. 

வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த 11 லட்சம் ரூபாய் பணத்தை திருட்டு பயம் காரணமாக பழைய துணி மூட்டையில் கட்டி வைத்திருந்ததும் அந்த மூட்டையைத்தான் மகன் கொடுத்ததும் தெரிய வந்தது. உடனே சுசீலாவின் கணவர் துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு பாழடைந்த ஓட்டு கொட்டகை மட்டுமே இருந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த சுசீலா குடும்பத்தினர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக் கொண்டு துரிதமாக செயல்பட்ட போலீசார் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் அடங்கிய தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். துணி சேகரிக்க வந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை பிடித்து விசாரித்தபோது மகாலட்சுமி என்ற பெண் வாடகைக்கு ஆட்டோ எடுத்ததாக கூறியுள்ளார். போலீசார் துப்பு துலக்கி மகாலட்சுமியை செங்குன்றம் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது பழைய துணி மூட்டையில் இருந்த பணத்தை எடுத்ததை ஒப்புக் கொண்டார். 

மகாலட்சுமி வீட்டிலிருந்த 11 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு சுசீலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, போலீசார் விசாரித்தபோது அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் மகாலட்சுமி மூலமாக வந்தது. போலி அறக்கட்டளை மூலமாக பணம், காசோலை மற்றும் பழைய துணிகளை பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் ஒரு பெரிய கும்பலே செயல்படுவதாகவும் வாரம் ஒருமுறை பணத்தை பங்கு போட்டு கொள்வதும் தெரிய வந்தது. பழைய துணிகளையும் ஏஜெண்டுகளிடம் விற்று பணம் சம்பாதிப்பதும் தெரிய வந்தது. இதற்காக ஏழ்மை நிலையில் உள்ள பெண்களிடம் நாளொன்றுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை சம்பளம் கொடுத்து துணிகளை பெறுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து 'அம்மா அறக்கட்டளை'யானது அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவானதை கண்டறிந்த போலீசார் அவர் குறித்து விசாரித்ததில் 'வார இதழ்' ஒன்று நடத்தி வந்ததும் காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இருப்பது போல படங்களை எடுத்துக் கொண்டு பலரிடம் பண வசூல் செய்ததும் தெரிய வந்தது. தற்போது மகாலட்சுமி கைதானதை தெரிந்து தலைமறைவாக இருக்கும் அரவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர். 

மனிதாபிமானத்துடன் செய்யும் உதவிகளைக் கூட சிலர் இதுபோல மோசடியாக பயன்படுத்துவதால் உண்மையாகவே தேவைப்படுவோருக்கு உதவிகள் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. வீடு தேடி வந்து உதவி கேட்பவர்களை ஆராய வேண்டும் என காவல் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்