பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நினைவு தினம்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் வசீகரக் குரலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவு தினம்
1922 ஆம் ஆண்டு மார்ச், 24 ஆம் தேதி மதுரையில் பிறந்த டி.எம்.எஸ்.-க்கு சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. முறையாக இசை பயின்ற பிறகு, கச்சேரிகளில் பாடிவந்தார்.1946 ஆம் ஆண்டு வெளிவந்த, கிருஷ்ண விஜயம் படத்தில், "ராதே என்னை விட்டு ஓடாதே...' என்ற பாடல்தான் திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல்.மூத்த தலைமுறை நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி அதன்பிறகு, ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கும் பாடல்களை பாடி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் டி.எம்.எஸ்.கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல் உணர வைப்பார்.இசை சக்கரவர்த்தி' ஏழிசை மன்னர்' போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசும், கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... உள்ளம் உருகுதய்யா... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளத்தை உருக வைக்கும் பல பாடல்களை அவரே இசையமைத்து பாடினார்.இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில், சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி, தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்த டி.எம்.எஸ். 2013 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.டி.எம்.எஸ். மறைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் என்றென்றும், ரசிகர்களின் நெஞ்சில் நிரந்தரமாக ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Next Story