சமூக வலைதளங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் பொன்னமராவதி ஆடியோ உள்ளிட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்களை கட்டாயமாக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இணையதள குற்றங்கள் தொடர்பான விவரங்களை இணையதள சேவை நிறுவனங்கள் முழுமையாக வழங்குவது இல்லை என சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இணையதள குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தகவல்களை அனைவருக்கும் வழங்கினால் அது ஆபத்தான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் காவல்துறையினர் கேட்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற தகவல்களை வழங்க முடியும் என இணைய தள நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்கள் லாப நோக்கத்துடன் செயல்படாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 25- ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story