வெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை

வெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது
வெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை
x
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இன்று நண்பகல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைகாற்று வீசியது. அதனைதொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. 
இந்த திடீர் மழையால வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்றுடன் கனமழை - பயிர்கள் சேதமாகும் என விவசாயிகள் வேதனை



நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பட்டணம்,  புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு விடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் இந்த மழை கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருப்பினும், தற்போது விளைந்துள்ள மாங்காய், வாழை, தென்னை உள்ளிட்டவை சூறாவளி காற்றினால் சேதமடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 3 நாட்களாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி



கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாலை நேரங்களில் நகரில் குளிர்ச்சி நிலவுகிறது.கோடைக்கால வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தும், மாலையில் குளிர்ச்சியும் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை 



சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழையால் தண்டவாளத்தில் விழுந்த மரம்



ஒசூர் முனிஸ்வரர் நகர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற யஸ்வந்த்பூர் - சேலம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. மரத்தை அகற்றிய பின்னர் ரயில் தாமதமாக சென்றது.

ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, மில்கேட் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பரவலாக கனமழை பெய்தது.கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து மேலூர் பகுதி மக்களை குளிர்வித்தது.

பலத்த காற்று, இடியுடன் கோடைமழை



திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரில் நிலவிவந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்ப்பட்டது. இந்த திடீர் கோடை மழையினால் திருவண்ணாமலை நகரில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சூறைக்காற்றுடன் மழை - மரம் விழுந்து கார் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.  வந்தவாசியை சுற்றி உள்ள மும்முனி, சளுக்கை, காரம், கொசப்பட்டு,சென்னாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவானது. சூறைக்காற்றால்,சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், சாம்ராஜ் என்பவரின் கார் மீது  மரம் விழுந்தது.எனினும், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்