அனைவருக்கும் வீடு திட்டம் - யாருக்கு பயன்?

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் செயலாக்கம் பற்றிய பிரமாண்ட கருத்துக் கணிப்பை தந்தி குழுமம் நடத்தியது.
x
இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதியுடன் கூடிய  வீடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் அனைவருக்கும்  வீடு திட்டம்.இத்திட்டம் நகர்புறங்களில் 2015ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் கிராமப்புறங்களில் 2016ம் ஆண்டு ஏப்ரல்  மாதத்திலும் தொடங்கப்பட்டது.அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 278. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 8 ஆயிரத்து 186 கோடி ரூபாய். அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 903 வீடுகளை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 131 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 298 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் 68 லட்சத்து 85 ஆயிரத்து 760 வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 736 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 36 லட்சத்து 95 ஆயிரத்து 480 வீடுகளை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 13  லட்சத்து 59 ஆயிரத்து 137 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  அதில் 13 லட்சத்து 24 ஆயிரத்து 851 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 64 வீடுகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 56 வீடுகளும் வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 38 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் தஞ்சாவூரில் 8 ஆயிரத்து 480 வீடுகளும், நாகப்பட்டினத்தில் 8 ஆயிரத்து 385 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்  நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த அளவிலான பலனையே பெற்றுள்ளது. நீலகிரியில் 263 வீடுகளும், தேனியில் 597 வீடுகளும், கோவையில் ஆயிரத்து 7 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 62 வீடுகளும், கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 423 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. தினத்தந்தி நாளிதழ், மாலைமலர், மற்றும் dt next இணைந்து  மக்களிடம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.  


இந்த திட்டத்தில் பயன்பெற வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எளிமையாக உள்ளனவா என்ற கேள்விக்கு 67 சதவீதம் பேர் எளிமையாக உள்ளன என்றும் 33 சதவீதம் பேர் கடுமையாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
வீடு கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்னும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்களா என்ற கேள்விக்கு ஆம் என்று 88 புள்ளி 9 சதவீதம் பேரும், 11 புள்ளி ஒரு சதவீதம் பேர் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் நிதி போதுமானதாக உள்ளதா என்ற கேள்விக்கு 82 புள்ளி 1 சதவீதம் பேர் அதிகரிக்க வேண்டும் எனவும், 17 புள்ளி 9 சதவீதம் பேர் போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.


அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் எந்த பிரிவில் நீங்கள் பயன்பெற்றீர்கள் என்ற கேள்விக்கு, நானே கட்டிக்கொண்டேன் என்று 88 புள்ளி 1 சதவீதம் பேரும், 11 புள்ளி 9 சதவீதம் பேர் வீட்டு கடனில் தள்ளுபடி பெற்றேன் எனவும் கூறியுள்ளனர்.வீடு கட்டுவதற்கான நிதி வங்கி கணக்கில் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு 41 புள்ளி 7 சதவீதம் பேர் ஆம் என்றும் 36 புள்ளி 7 சதவீதம் பேர் சற்று தாமதமாகிறது என்றும் 21 புள்ளி 7 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பாக, இன்னும் விரிவான சுவாரஸ்யமான தகவல்கள், கள நிலவரங்களுடன் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ஒரு விரல் புரட்சியில் இடம் பெற உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்