ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடி அலையும், யானையின் பாசப்பிணைப்பு, நெகிழவைப்பதாய் இருக்கிறது.
ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...
x
வனப்பகுதியை ஒட்டிய ஊர்களில் யானை - மனித மோதல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ஆனால்,முரட்டுத்தனமான காட்டு யானை ஒன்று, ஊர் மக்களுடன் சகஜமாக உலா வருகிறது. அவர்கள் கொடுப்பதை, அன்புடன், வாங்கிச் சாப்பிடுகிறது. ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும், ஒரு யானையைப் பற்றிய உணர்வு பொங்கும் உண்மைக்கதையைப் பார்க்கலாம்.

ஊட்டியிலிருந்து சுமார், 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மசினக்குடி. இந்த பகுதியில் ரிவால்டோ என்கிற காட்டு யானை மிகவும் பிரபலம். அந்த யானைக்கு 'ரிவால்டோ' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா...? ஒரு சின்ன பிளாஷ்பேக். 

மற்ற காட்டு யானைகளைப் போல், மனிதப் பரிச்சயமற்ற, ஒரு முரட்டுத்தனமான காட்டு யானையாகத்தான் அதுவும் இருந்தது. ஒருநாள் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி, அதன் தும்பிக்கை முனை காயமாகிவிட்டது. அப்போதிருந்து உணவைத் தும்பிக்கையால், எடுத்து உண்ண மிகவும் சிரமப்பட்டது.

செய்வதறியாத நிலையில், அந்தப் பகுதியில் உள்ள விடுதிக்குப் பக்கத்தில் வந்து நின்றது. முதலில் யானையைப் பார்த்து பயந்த, விடுதியின் உரிமையாளர், மார்க், அதன் நிலையைக் கண்டு பரிதாபமடைந்தார். வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை அளித்தார். சில நாட்களில் புண் ஆறினாலும் அதனால் பழைய வேகத்துடன் உணவை எடுத்து உண்ண முடியவில்லை. அதனால், உடல் மெலிந்துபோய், மார்க்கின் விடுதியையே சுற்றிச் சுற்றி வந்தது.

யானையின், நிலைமையைப் புரிந்துகொண்ட மார்க், கொஞ்சம், பயத்துடன், உணவை எடுத்துக்கொண்டு அதன் அருகில் சென்றார். அப்போதுதான், அந்த அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக, மனிதர்களைக் கண்டால், விரட்டும் காட்டு யானை, இவரை எதுவும் செய்யாமல், கைகளால் வழங்கிய உணவை, சாப்பிட்டுப் பசியாறியது. பிரேசில் கால்பந்து வீரர் ரிவால்டோவின் தீவிர ரசிகரான மார்க், அந்த யானைக்கும் அதே பெயரைச் சூட்டி, செல்லமாக அழைத்தார். நாளடைவில் ரிவால்டோ ஊருக்குள் வந்தால், சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலித்தார்கள். அந்தளவிற்கு, ஊர் மக்களுடன் நெருக்கமானது.

உதகையிலிருந்து கல்லட்டி வழியாக முதுமலைக்குச் செல்லும் பாதையில்தான் ரிவால்டோ சுற்றித் திரியும். சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு ரிவால்டோ மனிதர்களுடன் பாசத்துடன் நெருங்கிப் பழகியது. ஆண் யானைகள், விருப்பத்துக்குரியவரை மட்டுமே தன் தந்தங்களைத் தொட அனுமதிக்கும். காட்டு யானையான ரிவால்டோவிடம் பாகுபலி, படத்தில் வருவதைப் போன்று தந்தத்தைப் பிடித்து, சகஜமாக விளையாடுவார் மார்க். ஒருநாள் மார்க் திடீரென இறந்துவிட, ரிவால்டோ அநாதையானது. மார்க் இறந்துவிட்டார் என்பதை அறியாமலேயே தினமும் அவரைத் தேடி வரும் ரிவால்டோ, உணவு விடுதிக்கு அருகே நின்று சிறிது நேரம் பிளிறும். மார்க் வருகிறாரா எனப் பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும்.

இன்றும், இதுதான், தினமும் நடக்கிறது. ஊர்மக்கள், சுற்றுலாப்பயணிகள் என நாள்தோறும், நூற்றுக்கணக்கானோரை, சந்திக்கும், ரிவால்டோ, யாரையும், எதுவும், செய்வதில்லை. வனத்துறை காவலர்கள், அவ்வப்போது, பழத்தை கைகளால் ஊட்டி விடுகிறார்கள். பசியாறிவிட்டு, காட்டிற்குள் செல்லும். சாலையோரங்களில், ஆங்காங்கே சகஜமாக உலவும். இன்றும் அந்த விடுதியின் அருகே வந்து நின்று, ஏக்கத்துடன் பார்க்கும் ரிவால்டோ, தன்னை ஊட்டி வளர்த்த மார்க்கை தினமும், தேடிவந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறது.

அன்பு எனும், ஒற்றைச்சொல், அகிலத்தையே, கட்டிப்போடும் என்பார்கள். அன்பான, இந்தக் காட்டு யானையின் பாசமும், அப்படிப்பட்டதுதான். எவர் மனதையும், நெகிழவைக்கும், நிஜம்.


Next Story

மேலும் செய்திகள்