சொந்த செலவில் மாணவிகளுக்கு உடைகள் வாங்கித் தந்த ஆசிரியை

வேலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை தன் சொந்த செலவில் செய்து கொடுக்கிறார் பள்ளியின் தலைமையாசிரியை. அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
x
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை கிராமத்தில் 1966ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு லதா என்பவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். பணிக்கு சேர்ந்தது முதலே பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்தார் லதா. இதற்காக தன் சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டுகள், கம்ப்யூட்டர்கள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். தொலை தூரத்தில் இருந்து பள்ளிக்கு வர சிரமப்படும் மாணவர்களுக்கு ஆட்டோ வசதியையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் லதா... இவரின் இந்த அதிரடியான செயல்பாடுகளால் 35 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் பல மாற்றங்களை கொண்டு வந்ததால் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தனக்கு மனநிறைவைத் தருவதாக கூறும் தலைமையாசிரியை லதா, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகள் பல பகுதிகளில் மூடப்பட்டு வரும் நிலையில் இதுபோல் புதுமுயற்சிகளை கையில் எடுத்து அதை திறம்பட செயல்படுத்தி வரும் இவரைப் போன்ற ஆசிரியர்கள் பாராட்டக்குரியவர்களே...

Next Story

மேலும் செய்திகள்