மெரினா கடற்கரையை தூய்மையாக்க17-ஆம் தேதிக்குள் திட்டம் வகுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
சென்னை மெரினா கடற்கரையை தூய்மையாக்க வரும் 17-ஆம் தேதிக்குள் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரை குறித்து நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் கேள்விகள் எழுப்பினர். மெரினா கடற்கரையில் சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் இயங்கி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மீனவர்களுக்கென தனி மார்கெட்டை அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். வரும் 17-ம் தேதிக்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக்கி பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Next Story