திருச்செந்தூர் முருகன் கோவிலின் பெருமைகள்

கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ள நிலையில் முருகனின் அறுபடை வீடுகள் குறித்து பார்க்க இருக்கிறோம். அதில் சிறப்பிடம் பெற்றுள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலின் பெருமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
திருச்செந்தூர் முருகன் கோவிலின் பெருமைகள்
x
தமிழ் கடவுள் முருகனின் பெருமைகளை கூறும் விழாக்களில் முதன்மையானது சஷ்டி. ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் வரும் பிரதமையில் தொடங்குகிறது இந்த கந்த சஷ்டி விழா... இந்த விழாக்களில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் அறுபடை வீடுகள் விழாக் கோலம் பூண்டு காட்சி தரும். அந்த வரிசையில் 2ஆம் வீடான திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு தனிச்சிறப்புகள் நிறையவே உண்டு. மற்ற 5 கோயில்கள் மலைகளில் உள்ள நிலையில் கடலோரத்தில் உள்ள கோயில் இது மட்டுமே என்பதும் முருகனுக்கு உரிய சிறப்பாக இருக்கிறது. சூரபத்மனை வதம் சென்ற முருகப் பெருமான் தன் படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் என்பதும் இத்தலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சூரபத்மனை அழிக்க வரம் கேட்டு சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டி நின்றனர். அப்போது சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதில் இருந்து உருவானவர் தான் முருகப்பெருமான். சூரபத்மனை வதம் செய்ய நெருப்பு பிழம்பாக தோன்றிய முருகன், திருச்செந்தூரில் தங்கி சூரபத்மனை வதம் செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு சுப்ரமணிய சுவாமியாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில் சஷ்டி விழா வெகு விமரிசையாக நடக்கிறது. சஷ்டியின் துவக்க நாளுக்கு முன்பாகவே பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்த 6 நாட்களும் விரதம் இருந்து கந்தனை வணங்கினால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது..இந்த 6 நாட்களிலும் முருகன் பெருமைகளை கூறும் கந்த சஷ்டி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா போன்ற பாசுரங்களை பாடி வழிபடுவது வழக்கம். இதற்காகவே பல ஆண்டுகளாக கோயிலில் தங்கி விரதத்தை பூர்த்தி செய்ய வரும் பெண்களை பார்க்க முடியும்.. 
குழந்தை வரம் வேண்டுவோரும், திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து விரதம் இருந்து மனமுருக வேண்டினால் கந்த பெருமான் அவர்களின் கவலைகளை நீக்கி நற்பேறு அருள்வதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. விரதம் இருப்போருக்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். சண்முகர், ஜெயந்திநாதர் என பல்வேறு பெயர்களில் இருக்கும் முருகப் பெருமான் தன்னை நம்பிக்கையோடு தொழுவோருக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலாகவே இருக்கிறார். 157 அடி உயரம் கொண்ட இந்த கோயில் கோபுரம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் தோற்றத்தைப் போலவே காட்சி தருகிறது. திருச்செந்தூர் கோயிலின் இடது பக்கத்தில் உள்ள வள்ளிக்குகையின் சந்தன மலையில் தொட்டில் கட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை பேறு கைகூடுமாம். கோயிலின் மூலவரான பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும், உற்சவரான சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படுவதும் கோயிலின் மரபாக இருக்கிறது. பங்குனி உற்சவம், கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை, விசாகம் என வருடத்தின் பெரும்பாலான நாட்கள் கோயில் விழாக் கோலம் பூண்டிருக்கும். அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளுமாய் காட்சி தரும் சுப்ரமணியனை காண கண்கள் கோடி வேண்டும். பத்கர்கள் கூட்டம் போலவே கடல் அலைகளும் கந்தனை காண நொடிக்கு ஒரு முறை வந்து செல்வதையும் இங்கு கண்குளிர காண முடிகிறது... 

Next Story

மேலும் செய்திகள்