ரன்வீர்ஷா நண்பர் வீட்டை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் மீட்பு

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரன்வீர்ஷா நண்பர் வீட்டை சுற்றி புதைக்கப்பட்டிருந்த கற்சிலைகள் மீட்பு
x
ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை, மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள  230 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில்முறை நண்பர் கிரண்ராவ் இல்லத்தில் 2-வது நாளாக 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். வீட்டை சுற்றி மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சிலைகள் ஜேசிபி  இயந்திரங்கள் முலம் தோண்டியெடுக்கப்பட்டன. இந்த சோதனையில், 4 பெரிய கல்தூண் உள்ளிட்ட 23 பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.  

"கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் அல்ல" - கிரண்ராவின் வழக்கறிஞர் விளக்கம்

சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்ராவின் வழக்கறிஞர் கிங்ஸ்லீ சாலமன், தோண்டியெடுக்கப்பட்ட சிலைகள் கோயில்களில் திருடப்பட்டது அல்ல என்றும், அவை மூன்று தலைமுறைகளாக வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட கலைப்பொருட்கள் என்றும் தெரிவித்தார்.   

சட்டப்படி முறையாக விலை கொடுத்து வாங்கப்பட்டவை - ரன்வீர்ஷாவின் நண்பர் கிரண் ராவ்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முப்பது ஆண்டுகளாக மிகவும் உணர்வுப்பூர்வமாக பாதுகாத்து வந்த சிலைகளை கேட்டு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் குழப்பமான மனநிலையில் இருந்ததால், வெளியில் அழகாக வைக்கப்பட்டிருந்த சில சிலைகளை புதைத்து வைத்ததாகவும் கிரண்ராவ் குறிப்பிட்டுள்ளார். அது தவறு என்று உணர்வதாகவும், தம்மிடம் உள்ள சிலைகளின் விபரங்களை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும், கிரண்ராவ் தெரிவித்துள்ளார். தம்மிடம் உள்ள அனைத்து கலைப்பொருட்களும் சட்டப்படி முறையாக விலை கொடுத்து வாங்கப்பட்டவை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கிரண்ராவ், சிலைகள் மற்றும் புராதன பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்யவில்லை என்றும், விசாரணையின் போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்