பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்புகள்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருப்பதிக்கு அடுத்ததாக மக்களால் கொண்டாடப்படும் தலமாகவும் இருக்கிறது ஸ்ரீரங்கம்...
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்புகள்
x
மூலவராக காட்சி தரும் அரங்கநாத பெருமாளை காண கண்கள் கோடி வேண்டும். அவருடன் உறைந்திருக்கும் பெரிய பிராட்டியார் அம்மன் தன்னை நாடி வரும் பெண்களுக்கு திருமண தடைகளை நீக்கி வரம் வழங்கும் அம்பாளாக இருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயிலே பிரம்மாண்டம் தான்.காரணம் இங்குள்ள 21 கோபுரங்கள், ஏழு பிரகாரங்கள், 58 சன்னதிகளை சுற்றி வருவதே பக்தர்களுக்கு வியப்பளிக்கும். 

165 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம் தொடங்கி நாள் முழுவதும் விழாக் கோலம் தான். பெருமாளின் சக்திமிக்க ஆயுதமாக கருதப்படும் சுதர்சன சக்கரத்தின் அம்சமான, சக்கரத்தாழ்வார் சன்னதி இங்கு பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், பில்லி, சூனியம் போன்றவற்றை சக்ரத்தாழ்வார் துடைத்தெறிவார் என நம்பிக்கையோடு வரும் பக்தர்கள் அதிகம். 

எல்லா நாட்களிலும் விழாக் கோலமாக காட்சி தரும் ஸ்ரீரங்கம் புரட்டாசி மாதங்களில் களைகட்டும். அதிலும் சனிக் கிழமைகளில் அரங்கனை காண படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகம். அதேபோல் மதங்களை கடந்த மகான் என கொண்டாடப்படும் ஸ்ரீராமானுஜரின் பூதவுடல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. தைலமும், நறுமணப் பொருட்களும் அவரது உடலுக்கு சார்த்தப்படும் நிகழ்வும் இங்கு பிரசித்தம். ராமானுஜர் வகுத்து வந்த நெறிமுறைகளின் படியே இங்கு பூஜைகள் நடத்தப்படுவதாக வரலாறு கூறுகிறது. 

வேறு எங்கும் காணக் கிடைக்காத அதிசயமாக கருடாழ்வார் தனி சன்னதியில் பிரம்மாண்டமாக காட்சி  தருகிறார். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை இவர் நீக்குவார் என்பதும் மக்களின் நம்பிக்கை கோயிலின் சிறப்புகளில் தனக்கும் ஒரு தனி இடம் வாங்கி வைத்திருக்கிறாள் கோயில் யானையான ஆண்டாள். நவராத்திரி விழாவின் போது கொலுசு அணிந்து ஒய்யாரமாக நொண்டியடித்து, இசைக்கருவிகளை வாசிக்கும் ஆண்டாள், பக்தர்களின் செல்லப்பிள்ளையும் கூட.

இந்த கோயிலின் மடப்பள்ளியில் இன்றும் விறகு அடுப்பில் தான் பிரசாதங்கள் சமைக்கப்படுகிறது பல ஆண்டுகளை கடந்தும் ருசி மாறாத புளியோதரையையும், பொங்கலையும் ருசி பார்க்கும் பக்தர்களும் அதிகம். இதுபோல் எண்ணற்ற சிறப்புகளை தாண்டி கோயிலின் கோபுரம் போல மக்களின் மனதில் தேங்கி நிற்கிறார் எம் அரங்கநாதன்...

Next Story

மேலும் செய்திகள்