ஆன்மிக சொற்பொழிவில் அசத்தும் 8 வயது சிறுமி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பள்ளிச் சிறுமி ஒருவர், 8 வயதிலேயே, இலக்கிய ஆன்மிக சொற்பொழிவுகள் செய்து அசத்தி வருகிறார்.
ஆன்மிக சொற்பொழிவில் அசத்தும் 8 வயது சிறுமி
x
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கணேசன் - இளவரசி தம்பதியினரின் மகள் பூஜிதா.இவர், காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மழலைக் குரலில் இவர் பேசும் சொற்பொழிவுகளுக்கு, செட்டிநாட்டு மண்ணில் ரசிகர்கள் அதிகம். எல்.கே.ஜி. படிக்கும்போது மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறார். இவர் மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தால், அவரது பேச்சைக் கேட்பவர்கள், மெய்மறந்து போகிறார்கள்.

காரைக்குடி மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுக்கவே 
ஆன்மிகச் சொற்பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், முற்போக்கு மேடைகள், பள்ளி - கல்லூரி விழாக்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

சிறுமியின் இந்த அபார திறமையை அங்கீகரிக்கும் வகையில் தனியார் பள்ளி ஒன்று, ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே இவரைத் தத்தெடுத்துக்கொண்டது. அதன்படி, 12 ஆம் வகுப்புவரை பூஜிதாவுக்கு பள்ளியில் எந்தக் கட்டணமும் இல்லை. தற்போது 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார் பூஜிதா.

பள்ளியில் மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டால், இவருக்குத்தான் முதல் பரிசு. அந்தளவுக்கு நடிப்பிலும் படுசுட்டியாக இருக்கிறார். எட்டு வயதிலேயே இலக்கியச்செல்வி, முத்தமிழ்ச் செல்வி, எனப் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரராகி விட்டார் பூஜிதா.

சிறுவயது முதலே பூஜிதாவுக்கு அபார நினைவாற்றல் இருப்பதாகவும், அதனை சரியாகப் பயன்படுத்தி திருக்குறள் தொடங்கி பல்வேறு இலக்கிய நூல்களை கற்றுத் தந்ததாகவும், தெரிவிக்கின்றனர் பூஜிதாவின் பெற்றோர்.

.

.




Next Story

மேலும் செய்திகள்