டி-20 உலகக் கோப்பை - மகுடம் சூடிய ஆஸ்திரேலியா - டி-20 கோப்பையை முதல் முறை வென்று அபாரம்

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டு உள்ளது ஆஸ்திரேலியா
டி-20 உலகக் கோப்பை - மகுடம் சூடிய ஆஸ்திரேலியா - டி-20 கோப்பையை முதல் முறை வென்று அபாரம்
x
5 முறை உலகக் கோப்பை வெற்றியாளர், 2 முறை சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர். கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு டி-20 உலகக் கோப்பை மட்டும் நீண்ட நாட்களாக எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் குரூப்-ஒன் பிரிவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியா, 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலம் வாய்ந்த பாகிஸ்தானை பந்தாடிய ஆஸ்திரேலியா, 2010-ம் ஆண்டுக்குப் பின்னர் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்தது.

மறுபுறம் நியூசிலாந்தும், கோப்பையை வெல்லப் போகிறவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளை அப்புறப்படுத்தி, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்றார். அப்போதே வெற்றி ஆஸ்திரேலியாவுக்குதான் என்பது ஏறக்குறைய உறுதியானது. காரணம், துபாய் மைதானம் சேஸிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, ஆரம்பக்கட்ட ஓவர்களில் சற்று தடுமாறியது.

என்றாலும், ஓவர்கள் செல்ல செல்ல அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ரன் வேட்டையில் ஈடுபட்டார். குறிப்பாக ஆஸ்திரேலிய அதிவேக பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை கிட்டதட்ட சிதைத்துவிட்டார் வில்லியம்சன்...

ஆஸ்திரேலிய வீரர்களின் பவுலிங்கை நாலாபுறமும் பறக்கவிட்ட வில்லியம்சன், 85 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை சேர்த்தது நியூசிலாந்து. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவில் கேப்டன் ஃபின்ச் பிரகாசிக்கத் தவறினார். பெரிதும் ஃபார்மில் இல்லாத அவர் வந்தவேகத்தில் நடையைக் கட்டினாலும், தொடக்க வீரர் வார்னர் வழக்கம்போல் அதிரடி காட்டினார். அவருடன் மிட்ச்செல் மார்ஷும் கைகோர்க்க கோப்பையை நோக்கி அதிவேகமாக பயணித்தது ஆஸ்திரேலியா...

அரைசதம் அடித்து வார்னர் வெளியேறினாலும் மறுமுனையில் மிரட்டினார் மிட்ச்செல் மார்ஷ். இதனால், 19-வது ஓவரிலே எளிதில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, டி-20 உலக கோப்பையையும் முதல் முறையாக உச்சி முகர்ந்தது. இறுதிப் போட்டியில் எதிர்பார்க்கப்படாத கனவு ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்கு பங்களித்த வார்னர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

டி-20 உலகக் கோப்பை வெற்றியால், இன்றளவும் தாங்கள் ஐசிசி தொடர்களில் அசைக்க முடியாதவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது ஆஸ்திரேலியா

Next Story

மேலும் செய்திகள்